சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி உரையாற்றினார். இந்து மதத்தில் எந்த கடவுளும் வெறுப்பை விதைக்கவில்லை. அன்பை விதைத்திருக்கிறார்கள், சகிப்புத்தன்மையோடு இருந்திருக்கிறார்கள் என்ற அவரது பேச்சுக்களை திரித்து அதை அரசியலாக்க பார்க்கிறார்கள். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டிக்கிறது.
பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டும் இந்துக்கள் அல்ல, நாங்களும் இந்துக்கள் என ராகுல் காந்தி பேசினார். மீண்டும் மீண்டும் அவர்கள் இந்து மக்களின் பிரதிநிதி போல நாங்கள் எல்லாம் இந்து மக்கள் அல்லாதவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள். இந்து மக்கள் பெயரை சொல்லி வியாபாரம் செய்கிற கூட்டம் தான் பாஜக. 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு பரப்புரையின் போது தேர்தல் நேரத்தில் மோடி என்ன கூறினார்?
ராமேஸ்வரத்தில் உள்ள ஆலயத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றிக் காட்டுவேன் எனவும், அதற்கு வாய்ப்பு தாருங்கள் என கூறினார். பத்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் ராமேஸ்வர ஆலயத்திற்கு என்ன செய்தார்? தமிழ்நாடு அறநிலையத்துறை மூன்று ஆண்டுகளாக அந்தப் பணிகளைச் செய்து வருகிறது. இந்துக்களை தவறாக பாஜக பயன்படுத்துகிறது.
பெரியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் மேல் பல வழக்குகள் இருக்கிறது. அவர் பிணையில் வந்திருக்கிறார். தமிழ்நாடு அரசிடம் எதையும் ஆலோசனை கேட்காமல் கலந்து யோசிக்காமல் அவருக்கு மீண்டும் பணியை நீட்டித்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர். இதை வன்மையாக காங்கிரஸ் கண்டிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடந்தது, இது எல்லாம் நல்லதல்ல” என பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், சென்னை விமான நிலையத்தில் 260 கிலோ தங்க கடத்தலில் அண்ணாமலைக்கு நெருக்கமானர் ஒருவர் தொடர்பில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அண்ணாமலை பதில் அளிக்க வேண்டும் என கூறினார். மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் பயணம் குறித்த கேள்விக்கு, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அறிவியல் படிப்புக்காக அண்ணாமலை லண்டன் செல்ல உள்ளதால் ஜோ பைடன் அதிர்ந்து போய் இருப்பதாக விமர்சித்துள்ளார்.
மேலும், முதலில் பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் ராமானுஜரை பற்றி படிக்க வேண்டும். இந்துக்களை ஏமாற்றியதால் அயோத்தியில் பாஜக தோற்கடிகப்பட்டது. ராமரே மோடியை கைவிட்டு விட்டார். எங்கேயாவது தமிழக சபாநாயகர் அப்பாவு கூனிக்குறுகி கை கொடுத்திருப்பாரா? மக்களவையில் சபாநாயகர் தலைகுனியவில்லை. இந்திய அரசலமைப்பபையும், சட்டத்தையும், ஜனநாயகத்தையும், தேசத்தையும் தலை குனிய வைத்து இருக்கிறார்கள். நாளை முதல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது என தெரிவித்தார்.