கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17), பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றுப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கலவரம் மற்றும் விசாரணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கனியாமூர் தனியார் பள்ளி சீல் வைத்து மூடப்பட்டது.
இதனை தொடர்ந்து, மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், சீல் வைக்கப்பட்ட பள்ளியின் ஏ பிளாக் கட்டடத்தின் மூன்றாவது மற்றும் மாடி பகுதிகளை தவிர மற்ற பகுதிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று (ஜூன்.20) விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.ஆர். சாம்ராட், வழக்கின் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், ஏ பிளாக்கில் உள்ள மூன்றாவது தளம் மற்றும் மாடியை திறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவரை தொடர்ந்து, பள்ளிக் கல்விதுறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய அனுமதி பெறாமல் மூன்றாவது தளம் கட்டப்பட்டுள்ளதால் அதனை திறக்க அனுமதிக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, உரிய அனுமதி பெறாமல் கட்டடம் கட்டப்பட்டிருந்தால் நோட்டீஸ் அனுப்பி தனியாக நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி, மூன்றாவது தளம் மற்றும் மாடியை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு நிறைவு.. இரண்டு வாரத்தில் அறிக்கை.. காவல் துறை தகவல்..