தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பரப்புரையாளராக ஏழு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராணியும் (33) பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் மீனா என்பவர், கடந்த இரண்டு நாட்களாக ஜெயராணியை அழைத்து, பணிகள் முறையாக செய்வதில்லை எனவும், தகாத வார்த்தைகளால் குடும்பத்தினரையும், அவரையும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தொடர்ந்து திட்டி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஜெயராணி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் இன்று தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட ஜெயராணி கூறுகையில், “மாநகராட்சி ஆணையாளர் மீனா என்பவர், என் உடன் வேலை செய்யும் ஆறு பேரை அழைத்து, சரியாக வேலை செய்வதில்லை என தகாத வார்த்தைகளால் திட்டினார். மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு மிகுந்த மனவேதனையாக இருந்தது.
நேற்று வரை அதே மனநிலையோடுதான் இருந்தேன். இன்று வார்டு சபைக் கூட்டம் நடைபெறுவதால், நான் இன்று வேலைக்குச் சென்றேன். அப்போது அங்கே இருந்த மாநகராட்சி ஆணையாளர், மீண்டும் இதே போன்று செய்ததால்தான் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்தேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Interim Budget 2024: கர்பப்பை புற்றுநோயை தடுக்க சிறுமிகளுக்கு தடுப்பூசி - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!