தென்காசி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரி தொகுதியில் 26 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். தமிழகத்தில் 6 கோடியே 23 இலட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் மற்றும் புதுச்சேரியில் 10 இலட்சத்து 26 ஆயிரத்து 699 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
அந்த வகையில், தென்காசி நாடாளுமன்ற தொகுதியானது தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில், தென்காசி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளும், விருதுநகர் மாவட்டத்தில் 2 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடங்கியது.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில், 7 கோடியே 46 ஆயிரத்து 715 ஆண் வாக்காளர்கள், 7 கோடியே 78 ஆயிரத்து 509 பெண் வாக்காளர்கள் மற்றும் 215 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 15 கோடியே 25 ஆயிரத்து 439 வாக்காளர்கள் உள்ளனர்.
இவற்றில், 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மொத்தமாக 1,743 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 106 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை, 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என மொத்தம் 120 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 2 நிரந்தர சோதனை சாவடிகள் மற்றும் 7 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளும், சம உரிமைக்காக சம அந்தஸ்து பெற வேண்டி மக்களோடு ஒன்றாக இணைந்து, வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
புளியங்குடி வாக்குச்சாவடியில் வாக்களித்த மாற்றுத்திறனாளி மாரிஸ் கூறியதாவது, “ முதல் வாக்காக தனது ஜனநாயக கடைமையை நான் ஆற்றியுள்ளேன். 100 சதவீதம் வாக்களிக்கும் நோக்கில் அனைத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றுங்கள். இன்றைய நாளில் எந்த ஒரு வேலையாக இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு ஜனநாயக கடமை ஆற்றுங்கள். இந்த நிலைமையிலும் நான் என்னுடைய கடமையை ஆற்றுகிறேன். அதேபோல் நீங்களும் உங்களுடைய கடமையை ஆற்ற வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ்நாடு முழுவதும் 12.55 சதவிகித வாக்குகள் பதிவு! - Tamilnadu Voter Turnout