சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் விலை உயர்ந்த போதைப் பொருளான மெத்தபெட்டமைன் விற்பனை செய்யப்படுவதாக சென்னை வடக்கு மண்டல போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து வண்ணாரப்பேட்டை முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காதர் மொய்தீன் என்ற நபரை சோதனை மேற்கொண்டதில், அவரிடம் 8 கிராம் மெத்தபெட்டமைன் இருந்தது தெரிய வந்துள்ளது.
பின்னர் அதனை பறிமுதல் செய்த போலீசார், காதர் மொய்தீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுல்தான் என்பவரிடம் இருந்து போதைப் பொருள் வாங்கியதாகவும், வாட்ஸ் அப் குழு மூலம் போதைப் பொருள் வாங்குவதாகவும், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ராகுல் என்பவரிடம் இருந்து மெத்தபெட்டமைன் வாங்கியதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து திருவான்மியூரைச் சேர்ந்த ராகுலை சென்னை வடக்கு மண்டல போலீசார் கைது செய்தனர். அதேபோல், ராகுலின் வீட்டில் போதைப் பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளாரா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
ராகுலிடம் மேற்கொண்ட விசாரணையில், ராகுல் நீச்சல் குளம் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு உறவினர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், ராகுலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை வழக்கு.. முக்கிய நபரின் திடுக்கிடும் வாக்குமூலம்! - Admk Ex Councilor Son Murder Case