கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இந்த சத்திய ஞான சபையில் மாதம்தோறும் பூச நட்சத்திரத்திலும், வருடத்தில் ஒரு நாள் தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம்.
தைப்பூச தினத்தன்று பல லட்சம் பேர் இந்த பெருவெளியில் கூடி தைப்பூச ஜோதி தரிசனத்தை கண்டுகளிப்பர். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில், தென்கோடியில் தருமசாலை, ஒளித்திருக்கோயில் ஆகியவற்றை அமைத்த வள்ளலார், மீதமுள்ள இடத்தை அவரைப் பின்பற்றும் பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியாக பயன்படுத்தினார்.
தைப்பூசம் நாளில் ஜோதி நடைபெறும் பெருவிழா அன்று, ஏழு திரைகளை விலக்கி ஜோதி காட்டப்படும் போது, அதை பக்தர்கள் எந்தத் தடையுமின்றி பார்க்க வேண்டும் என்பது தான் பெருவெளி அமைக்கப்பட்டதன் நோக்கமாகும்.
இந்த நிலையில், வள்ளலாரின் கருத்துகளைப் பரவலாக்கும் விதமாக, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது திமுக. அதன்படி, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அது குறித்த ஆணை வெளியிடப்பட்டு, ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது பல்வேறு அரசியல் கட்சியினரும், அப்பகுதி மக்களும், வள்ளலார் பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெருவெளியில் கட்டிடம் கட்டுவதால் பெருவெளி சிறு வழியாக மாறிவிடும், இது போன்ற தைப்பூசத் தினத்தன்று பல லட்சம் மக்கள் கூடுவது கடினமாகிவிடும். எனவே, சர்வதேச மையத்தை வடலூரில் அரசு நிலம் உள்ள வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இருந்தாலும், அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து தற்போது வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது.
இதனை அறிந்த அருகில் உள்ள பார்வதிபுரம் கிராம மக்கள், திடீரென சர்வதேச மையத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்களது முன்னோர்கள் தான் 106 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்ததாகவும், இந்த நிலத்தில் தற்போது சர்வதேச மையம் அமைந்தால், அந்த 100 ஏக்கரில் பெருவெளி என்பது சிறுவெளியாக மாறிவிடும் என்பதால் அதனை அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது," பணிகளை நிறுத்தினால் மட்டுமே இங்கு இருந்து செல்வோம், இல்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்" என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 200 பேரை கைது செய்த போலீசார், தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தண்ணீர் தேடி அலைந்த யானை.. பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராட்டம்!