தென்காசி: வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று (அக்.13) சங்கரன்கோவில் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலுக்குள் உள்ள பிரகார வீதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை நீர் தேங்கியது. அதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி, வீரசிகமணி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சங்கரன்கோவில் வடக்கு ரத வீதி மற்றும் தெற்கு ரத வீதிகளில் அதிகப்படியாக மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மேலும், வருகால்பகுதி முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் செல்லாமல், சாக்கடை தண்ணீரும் மாலை நீரில் கலந்து சென்றது. திருவேங்கடம் சாலையில் உள்ள சில கடைகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் கடைக்குள் இருந்து தண்ணீரை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், பிரசித்தி பெற்ற சங்கரநாராயணன் திருக்கோயில் உள்வளாகத்தையும் மழை நீர் விட்டு வைக்கவில்லை. தற்போது, கோயில் வளாகத்தில் புகுந்த மழை நீரை அகற்றும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஏற்கனவே பயிர் வகைகளை விதைத்து விட்டு மழைக்காக ஏங்கித் தவித்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கத்தால் அதிகரித்து வந்த சங்கரன்கோவில் சுற்றுப்பகுதியில், நேற்று கிட்டத்தட்ட 2 மணி நேரம் பெய்த கனமழையால் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே, அதிகப்படியாக மழை பெய்து வருவதால் அனைத்து பகுதியையும் சீரமைக்க சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்