வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. நேற்று முன்தினமும் கனமழை பெய்த நிலையில் நேற்று காட்பாடி முத்தமிழ் நகர், எம்ஜிஆர் நகர், விஜி ராவ் நகர் ஆகிய வீதிகளியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, மாநகராட்சி ஆணையர் ஜானகி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இரவும் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் சித்தூர் பேருந்து நிலையம் முதல் பழைய காட்பாடி வரை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் கடல் போல் தேங்கி இருந்ததால் சாலையை கடப்பதற்கு பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சாலைகளில் ஆங்காங்கே கனரக வாகனம் முதல் இருசக்கர வாகனம் வரை பழுதாகி நின்றன.
காட்பாடி பகுதியில் வி.ஜி.ராவ் நகர், முத்தமிழ் நகர், பாரதி நகர், காந்தி நகர் என உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீரோடு கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்குள் ஆகி உள்ளனர். மேலும் பலரது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் இரவு முழுக்க தூங்க முடியாமல், விடிய விடிய மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சரியான கால்வாய் வசதி இல்லாத காரணத்தினால் இதுபோன்று மழைக்காலங்களில் காட்பாடியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்து கடும் இன்னலுக்கு ஆளாகி வருவது தொடர்கிறது. இது போன்ற வீடுகளுக்குள்ளும், வீட்டை சுற்றிலும் மழை நீர் தேங்குவதால், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இது போன்ற மழைக்காலங்களில் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மழைநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் எனவும், காட்பாடி பகுதியில் தேங்கியுள்ள நீரை அகற்றவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையில் ஒருஒபுறம் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு... மறுபுறம் கள்ள மது விற்பனை அமோகம்! - drug awareness