ஈரோடு: இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பூனைகளை வளர்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என சர்வதேச பூனை தினமான இன்று சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூனைகளின் இனத்தை பாதுகாக்கும் வகையில் சர்வதேச விலங்குகள் நல நிதியத்தால், கடந்த 2002ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8ம் தேதி சர்வதேச பூனை தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) சர்வசேத பூனைகள் தினம் கொண்டாடப்பட்டது.
பூனைகளுக்கென பிரத்யேகமாக பதிவு செய்யப்பட்ட பூனை ஆர்வலர்கள் சங்கமான ஹுரைரா கேட் பான்சியர்ஸ் (Huraira Cat Fanciers) உறுப்பினர்கள் இதில் பங்கேற்று மாணவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். பூனைகளுக்கு பிடித்தமான ட்ரீட் என்னும் கிரேவி உணவை பூனைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஹுரைரா கேட் பான்சியர்ஸ் சங்கத்தின் தலைவர் முகமது ரப்பானி பேசுகையில்,"இந்தியாவில் சமீபகாலமாக வெளிநாட்டு ரக பூனைகள் வளர்ப்பது அதிகரித்து உள்ளது. அதே சமயம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தெரியாமல் பூனைகளும், பூனை பெற்றோர்களும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இதனால் பூனையின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆகையினால் பூனை பற்றி நன்கு அறிந்து அதற்கு தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளுடன் பூனைகளை வீட்டில் வளர்க்க வேண்டும். குறிப்பாக, நமது இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பூனைகளை வளர்ப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டும்.
மாணவர்களுக்கு பூனைகளை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பூனை இன பெயர்கள், பூனை நிறம் மற்றும் உடல் அமைப்பு, பூனை வம்சாவளிகள் மற்றும் பூர்வீகம், பூனை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, பூனைக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து உணவு குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வீட்டுக்கு ஒரு செல்லப்பிராணி அவசியம் வளர்க்க வேண்டும். அவ்வாறு செல்லப்பிராணிகள் வீட்டில் வளர்க்கும் பொழுது தேவையற்ற சிந்தனைகள், மன அழுத்தம், மொபைல் போன் அடிக்சன், முன்கோபம் போன்ற விஷயங்களில் இருந்து மாணவர்கள் மீண்டு வர நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கிறது" என்றார்.