வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா புலிமேடு கிராமத்தில், ஜவ்வாது மலை அடிவாரத்தில் மூலிகை மணம் கமழ இயற்கை எழிலுடன் அமைந்து உள்ளது புலிமேடு அருவி. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, வல்லண்டப்பன் சீனிவாச பெருமாள் கோயில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஜவ்வாது மலையில் எப்பொழுதெல்லாம் மழை பொழிகிறதோ, அப்போதெல்லாம் இந்த புலிமேடு அருவியில் மூலிகை மனத்தோடு நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக, குற்றால அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது. இந்த அற்புத காட்சியைக் காணவும், மூலிகை நீரில் குளித்து புத்துணர்ச்சி பெறவும், கட்டணமில்லா இந்த அருவிக்கு வேலூர் மக்கள் சாப்பாடு கட்டிக் கொண்டு, குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.
அதேசமயம், இந்த அருவியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வழுக்கு பாறையில் வழுக்கி சாகசம் செய்வது, நெஞ்சைப் பதற வைக்கும் படியாக உள்ளது என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். அதனால், சரியான சாலை அமைத்து இதைச் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும், இங்கு ஒரு தடுப்பணை கட்டினால் அணைக்கட்டு பகுதிக்கு அணையே இல்லா அணைக்கட்டு ஊர் என்ற பெயர் நீங்குவதோடு, இங்கு குடிநீர் மற்றும் விவசாயம் செய்வதற்கு, வேண்டிய நீரும் தேவையான அளவு கிடைக்கும் என்றும் சமுக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும், இது அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் காவல்துறையும், வனத்துறையும் இணைந்து பாதுகாப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குற்றாலத்தில் இருப்பது போன்று இங்கும் அனைத்து வசதிகளும் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இதை சுற்றலா தலமாக மாற்றினால், வேலூரில் அமிர்தி வன உயிரின பூங்காவை அடுத்து இந்த வல்லண்டப்பன் புலிமேடு அருவியும் பொழுதுபோக்கு தலமாக மாறி அரசுக்கு வருவாய் ஈட்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்