தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகள் பழமையான இந்த மருத்துவமனைக்கு பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
மேலும், இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு (ICU), கண் நோயாளிகள் பிரிவு, மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, இதய நோயாளிகள் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு என அனைத்து மருத்துவ பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கழிவுகளை முறையாக கையாளாமல், மருத்துவமனை முன்பு உள்ள சாலை ஓரத்தில் மாத்திரைகளை கொட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது, மருத்துவமனை வளாகத்தின் முன்பாக உள்ள சாலையில் காலாவதியான மாத்திரைகள் மற்றும் காலாவதி ஆகாத மாத்திரைகள் குவியலாக கொட்டி கிடந்தது. இந்த மாத்திரைகள் அனைத்தும் இருதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், அல்சர், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு வழங்கக்கூடிய மாத்திரைகள் என தெரியவந்துள்ளது.
சாலை ஓரத்தில் கொட்டி கிடக்கும் மாத்திரைகளை அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டாக எடுத்து உண்டால் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. அது மட்டுமில்லாமல் அவ்வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் உட்கொண்டால் கால்நடைகள், நாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை முறையாக கையாளாமல் மருத்துவமனை முன்பு உள்ள சாலை ஓரத்தில் கொட்டிக் கிடக்கும் அரசு மருத்துவமனை மாத்திரைகளை அகற்ற அப்பகுதிகள் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: “உங்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால்..” தூய்மைப் பணியாளர்களிடம் தேவதானப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் வாக்குவாதம்!