திருவாரூர்: பழைய பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டிய பேருந்து, அங்கு வராமல் மாற்று வழியில் சென்றதால், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பணிமனை முன்பு அமர்ந்து, உள்ளே செல்லும் பேருந்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம், வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்காக, பேருந்து நிலையத்தின் வழியாக நகருக்குள் வரும் சாலை முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள், மேம்பாலம் அல்லது கலைஞர் பவள விழா வளைவு (Arch) வரை வந்து பயணிகளை ஏற்றி செல்வதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு நகரப் பகுதியில் பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து அலிவலம், புதுப்பத்தூர், ஆந்தகுடி வழியாக நாகலூர் செல்லக்கூடிய 5B என்கிற அரசுப் பேருந்து, வாழவாய்க்கால் என்கிற இடத்தில் திருப்பப்பட்டு, நாகலூருக்கு சென்றுள்ளது. இதனிடையே, பழைய பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள், பேருந்து மாற்று வழியில் சென்றதால் கோபமடைந்து, பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அமர்ந்து, உள்ளே செல்லும் பேருந்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பயணி சுமித்ரா கூறுகையில், “நாங்கள் கான்கிரீட் வேலை செய்கிறோம். பேருந்திற்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறோம். ஆனால், பேருந்து நிலையத்திற்கு வர வேண்டிய பேருந்து மாற்று வழியாகச் சென்றுள்ளது. இதற்கு அடுத்து எங்கள் பகுதிக்குச் செல்லும் பேருந்து இரவு 10.30 மணிக்கு வரும். அதில் சென்றால் இரவு 11 மணிக்கு தான் வீட்டிற்குச் செல்வோம். நாங்கள் நாளை காலை 6 மணிக்கு மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும்.
எங்களுடன் இங்கு, கைகுழந்தை, பள்ளி மாணவர்கள் உட்பட 60 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இது குறித்து நாங்கள் டெப்போவில் (bus Depot) கேட்டதற்கு, இங்கிருந்து செல்லுங்கள் இல்லையென்றால் போலீசை அழைப்பேன் என்று கூறுகின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது" - அமைச்சர் சிவசங்கர்!