திருவாரூர்: தமிழகத்திலேயே அதிக குடிசை வீடுகள் உள்ள மாவட்டமாகவும், விவசாயம் மற்றும் கால்நடைகளை நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வரும் அதிக மக்கள் கொண்ட மாவட்டமாகவும் திருவாரூர் மாவட்டம் விளங்கி வருகிறது. எனவே, விவசாய தினக்கூலி மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்றவற்றை நம்பி இங்கு பெரும்பாலான மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
பொது விநியோக திட்டம்: திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 742 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. 3 லட்சத்து 91 ஆயிரத்து 136 குடும்ப அட்டைகள் உள்ளன. குறிப்பாக, திருவாரூர் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் மாதத்திற்கு மூன்று லட்சத்துக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாமாயில் பாக்கெட்டுகளும் மற்றும் 2 லட்சத்து 94 ஆயிரம் கிலோ துவரம் பருப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
இரண்டு மாதம் தட்டுப்பாடு: இங்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும், துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், திருவாரூர் மடப்புரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த இரண்டு மாத காலமாக, பருப்பு மற்றும் பாமாயில் முறையாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்படும் பொருள்களை மட்டும் நம்பியுள்ள இப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மடப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலக்ஷ்மி கூறுகையில், “ரேஷன் கடையில் வழங்கப்படும் பாமாயில் மற்றும் பருப்பு போன்றவை சாதாரணமாக ஏழை, எளிய மக்களுக்கு கிடைப்பதில்லை. வெளியில் விலை அதிகம் கொடுத்து வாங்கும் சூழ்நிலையில் நாங்கள் இல்லை. இந்த மாதத்திற்கான பொருள்கள் வராது என்று கடை ஊழியர்கள் கூறுகின்றனர். வெளியில் வாங்கினால் அதிக பணம் தேவைப்படுகிறது. எனவே, அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து, இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர் கூறுகையில், “இந்த மாதத்தில் 11 நாட்களைக் கடந்த பிறகும் துவரம் பருப்பும், பாமாயிலும் இதுவரை ரேஷன் கடைகளுக்கு வரவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை காலம் என்பதாலும் விவசாய தினக்கூலி வேலைகளும் பெருமளவு இல்லாத காரணத்தினால், பொதுமக்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரேஷனில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருளான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைக்காதது மேலும் பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ரேஷன் கடைகளில் அரை லிட்டர் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவும் குறைக்கப்பட்டு 200 மில்லி வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அத்தியாவசியப் பொருளான பாமாயிலும், பருப்பும் இந்த மாதம் கிடைப்பதற்கான எவ்வித உறுதியும் அரசால் வழங்கப்படாத நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த இரண்டு மாதமாக கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்படவில்லை என்று கூறுகின்றனர். குறிப்பாக, பொதுமக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்ற நிலை இருக்கின்ற போதும், இதுவரை ரேஷன் கடைகளுக்கு பாமாயில், துவரம் பருப்பு போன்ற பொருட்கள் வராதது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: சிலம்பத்திற்கு இப்படி ஒரு வரலாறா? எகிப்திற்கு சிலம்பம் சென்றது எப்படி? சிலிர்ப்பூட்டும் தகவல்கள்! - History Of Silambam