ஈரோடு: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் மழை நீர் ஓடை செல்கிறது. மழைநீர் ஓடையை ஒட்டி சருகு மாரியம்மன் கோயில் வீதி, தோட்ட சாலை உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்யும் மழை நீர் ஓடை வழியாக சென்று காவிலிபாளையம் குளத்தில் கலக்கிறது. ஓடையை பல ஆண்டுகளாக, பராமரிப்பு செய்யாததால் அதிகளவு முட்புதர் வளர்ந்து புதர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், நகராட்சி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக ஓடையில் கலப்பதால் சேறும் சகதியுமாகவும், மழை நீர் சீராக செல்ல வழியில்லாமல் பல இடங்களில் கழிவு நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் மழை நீர் ஓடையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 50க்கும் மேற்பட்ட கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது.
மழை நீர் ஓடையின் குறுக்கே கான்கிரீட் தொட்டிகள் கட்டுவதால் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் முன்புறம் பின்புறம் என சுற்றிலும் கழிவுநீர் கருப்பு நிறத்தில் தேங்கி நிற்கும் அவல நிலை நிலவுகிறது. இந்த நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.
குறிப்பாக, மழைக் காலங்களில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. தேங்கி நிற்கும் கழிவு நீருக்கு அருகிலேயே வீடுகள் உள்ளதால் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி வசிக்கும் மகேஷ்வரி கூறுகையில், ”மழை நீர் ஓடையை ஆக்கிரமித்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடும் என ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் அதை கண்டு கொள்ளாமல் பணிகளை செய்து வருவதால் நீர்வழிப் பாதையானது தற்போது கழிவுநீர் தேங்கி நிற்கும் மையமாக மாறிவிட்டது.
இதனால் மக்கள் காய்ச்சல், வாந்தி பேதி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகின்றனர். மழை பெய்தால் ஓடையில் செல்ல வழி இல்லாமல் மழை நீர் கழிவு நீருடன் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து அதிகாரிகள் இங்குள்ள மக்களிடம் எதையுமே தெரிவிக்கவில்லை.
மேலும், மழை நீர் செல்லும் பாதையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி அதிகாரிகள் செயல்படுகின்றனர். மக்களுக்கு பயனில்லாத திட்டங்கள் எங்களுக்கு வேண்டாம், ஆகவே இந்தத் திட்டத்தை கைவிட்டு மழை நீர் ஓடையை காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாய், தம்பியை கொன்றுவிட்டு படம் பார்த்த மகன்.. சென்னை இரட்டைக்கொலை வழக்கில் திடுக்கிடும் பின்னணி! - chennai double murder case