மதுரை: மதுரையிலிருந்து ஏப்ரல் 15-ஆம் நாள் காலை புறப்பட்டுச் சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில், 22 நிமிடம் முன்னதாக மட்டுமன்றி, நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு முன்பாகச் சென்றது. இதனைத் தொடர்ந்து, இதே கால அட்டவணையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து ஒவ்வொரு நாளும் காலை 6.40 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12636) புறப்பட்டு, பிற்பகல் 2.10 மணியளவில் சென்னை எழும்பூரைச் சென்றடையும். அதே நேரம் திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20665) பிற்பகல் 1.50 மணிக்கு எழுப்பூரைச் சென்றடையும். பெரும்பாலும் தாம்பரம் அல்லது கோடம்பாக்கத்திற்கு இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை வந்தே பாரத் முந்திச் செல்லும்.
அக்குறிப்பிட்ட நிலையங்களிலோ அல்லது இடைப்பட்ட ஏதேனும் ஒரு நிலையத்திலோ வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டு வந்தே பாரத் முன்னே செல்வது போன்று நேர அட்டவணை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 15-ஆம் தேதி மதுரையிலிருந்து காலை 6.40க்குப் புறப்பட்டுச் சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு முன்பாக பிற்பகல் 1.48 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றடைந்துள்ளது. பிற்பகல் 2.10க்குச் சென்று சேர வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு முன்பாகச் சென்றதோடு, குறிப்பிட்ட நேரத்திற்கும் முன்பாகச் சென்றுள்ளதை பயணிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து இந்திய ரயில்கள் ஆய்வாளரும், அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து (ஏபிஜிபி) அமைப்பின் ஆலோசகருமான அருண்பாண்டியன் கூறுகையில், "வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணம் 20 நிமிடங்கள் கூடுதலாக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7.10 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி, சென்னை எழும்பூரை பிற்பகல் 2.25 மணிக்கு சென்றடைந்தது. சரியாக 7.15 மணி நேரங்கள் பயணம் செய்தது. இந்த நிலையில் இந்தாண்டு பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 7.20 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வைகை எக்ஸ்பிரஸ் பயண புள்ளி விபரங்களை அடிப்படையாக் கொண்டு பார்த்தால், வைகையின் பயண நேரத்தை 7.10 மணி நேரமாகக் குறைக்க முடியும். எடுத்துக்காட்டாக கடந்த ஏப்ரல் 15-ஆம் நாள் 7.08 மணி நேரத்தில் சென்னையை சென்றடைந்துள்ளது. ஆகையால் நடைமேடை நிர்வாகம், கால அட்டவணையை சற்று சரி செய்தால், வைகை எக்ஸ்பிரஸை மீண்டும் 7.10 மணி நேரப் பயணத்திற்குள் கொண்டு வர முடியும்.
இந்த நேர மாற்றம் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலைப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்க பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் வந்தே பாரத் ரயில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ரயில்வே பணியாளர்களின் திறன் மிக்க உழைப்பு ஆகியவற்றால் இந்தப் பயண நேரத்தை சாத்தியமாக்க முடியும். ரயில்வே நிர்வாகம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்குப் பேருந்துகளில் தனி வழி அமைக்கப் போக்குவரத்துக்கு துறை செயலாளர் பரிசீலிக்க உத்தரவு! - High Court Madurai Branch