சென்னை(ஆவடி)/காட்பாடி: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பேசின் பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
எனவே, சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடியில் இருந்து இயக்க தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. பேரிடர் காலங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் போதிய முன்னேற்பாடு இல்லாமல் ஆவடியில் இருந்து ரயில் இயக்கப்படும் என அறிவித்த நிலையில் ஆவடி ரயில் நிலையதிற்கு வர பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர் .கன மழை காரணமாக ஆட்டோ, கார் ஆகியவற்றின் மூலம் ஆவடி வருவதற்கு கூடுதல் செலவும் ஏற்படுகிறது. இதனால் சிலர் ரயிலை தவறவிட்டு தவித்த காட்சிகளை நம்மால் பார்க்க முடிந்தது. முறையான ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என ரயில் பயணிகள் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளுடன் மழை நீர் தேக்கம்..நோயாளிகள் கடும் அவதி!
ரயிலில் செல்வதற்காக குடும்பம் குடும்பமாக 2000த்துக்கும் மேற்பட்ட பயணிகள் ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்தனர்.அவர்களுக்கு, கழிவறைகள்,குடிநீர் வசதி,போன்றவை செய்து தரப்படவில்லை, இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.மழைக்காலங்களில் ஆவடி ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் செல்வது வாடிக்கையாக உள்ளது.எனினும் இதனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் போதுமான வசதிகளை செய்து தந்திருக்க வேண்டும் என பயணிகள் கூறினர்.
காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி: வேலூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சென்னையில் அதிக அளவு மழை பெய்து வருவதால் வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே, வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக செல்ல வேண்டிய ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.
இதன் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் பயணிகளும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் பயணிகளும் சுமார் இரண்டு மணி நேரம் காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.