தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு அறிவிக்கப்பட்ட ரயில்களை விரைந்து இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோரை, இந்திய தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டிஆர் கோடீஸ்வரன் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் பிரமநாயகம் ஆகியோர், சென்னை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அவர்கள் அளித்த மனுவில், "துறைமுக நகரமான தூத்துக்குடிக்கு புதிய ரயில் வசதி இல்லை. சென்னை, மைசூர் ஆகிய இரு ரயில்களை தவிர நீண்ட தூர ரயில்கள் ஏதும் இல்லை. தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில் வசதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகின்றோம். ஆனால், எந்த பலனும் இல்லை.
மேலும், ரயில்வே போர்டு அங்கீகரிக்கப்பட்ட தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாரம் மூன்று ரயில்களையும், திருநெல்வேலி - பாலக்காடு- திருநெல்வேலி பாலருவி விரைவு ரயிலையும் இயக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் ரயிலை காலை 7 மணிக்கு முன்பாக சென்னை எழும்பூரை சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருச்சி- காரைக்குடி- விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து திருச்சி- தூத்துக்குடி விரைவு ரயில் என்ற பெயரில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், தூத்துக்குடி பயணிகள் திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலை விருதுநகர் சந்திப்பில் பிடிக்க வசதியாக இருக்கும். மேலும், தூத்துக்குடி- மைசூர்- தூத்துக்குடி விரைவு ரயில் தினமும் காலை 9:30 மணிக்கு முன்பாக தூத்துக்குடி வந்து சேரும் வகையிலும், மாலை 5:30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் வகையிலும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
தூத்துக்குடியில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6:20க்கு திரும்பி வரும் வகையில் தூத்துக்குடி மதுரை இடையே இன்டர்சிட்டி ரயில் இருக்க வேண்டும். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னைக்கு கூடுதலாக ஒரு விரைவு ரயில் இயக்க வேண்டும்.
சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலுக்கு கடம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும். மணியாச்சி சந்திப்பில் புறவழி ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும். அனைத்து ரயில்களும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும்” இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் படிக்கும் 1 கோடி மாணவர்களின் செல்போன் எண் சரிபார்ப்பு - பள்ளிக்கல்வித்துறை - STUDENTS MOBILE NUMBER CHECKING