ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த முஸ்தபா தோட்டத்தைச் சேர்ந்தவர் தனபால் (45). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத் தோட்ட பிரச்சனை ஒன்றில் நிகழ்ந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டு காலமாக தனது வாழ்க்கையைச் சிறையில் கழித்து வரும் இவர், தனது வயதான தந்தையைப் பார்ப்பதற்காக மூன்று நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார். தனது சொந்த ஊரான அந்தியூருக்கு வந்து தன் தந்தையைப் பார்த்துவிட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று பத்தாவது முறையாக தனபால் ரத்த தானம் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தான் சிறையில் தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ததில் கிடைத்த 2 மாதக் கால ஊதியமான 5,600 ரூபாய்க்கான காசோலையை ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இவ்வாறு பரோலில் வெளிவந்து மக்கள் சேவையைச் செய்யும் ஆயுள் தண்டனை கைதி தனபால். குறித்த சில சுவாரசிய தகவல்கள் தெரியவந்ததில் அவர், சிறைத்துறைத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்ற கைதி என்பதும். இவர் மற்ற கைதிகளுக்கு நன்மதிப்பின் கீழ் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
மேலும் சிறையில் பெறும் ஊதியத்தை அவ்வப்போது நிவாரண உதவிகளுக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் தனபால் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அரியலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 50 வாகனங்கள் ஜூன்18ல் பொது ஏலம்!