சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் விரைவு நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாகத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவது, தேர்தல் அறிக்கை தயார் செய்வது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக,அக்கட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, கொமதேக, இந்தியன் யூனியன் முஸ்லிம், உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியன் யூனியன் முஸ்லிம் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கொமதேகவினர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கட்சியின் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில் “ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திட்டுள்ளோம். அதன்படி 2019ம் ஆண்டை போலவே ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி வாகை சூடும்” எனத் தெரிவித்தார்.
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி: ராசிபுரம் தொகுதியை நீக்கி விட்டு புதிதாக உருவாக்கப்பட்டதுதான் நாமக்கல் மக்களவைத் தொகுதி. ராசிபுரம் தொகுதியில் சின்ன சேலம், ஆத்தூர், தலைவாசல் (தனி), ராசிபுரம், சேந்தமங்கலம் (தனி), நாமக்கல் (தனி) சட்டசபைத் தொகுதிகள் முன்பு இருந்தன.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கொமதேக சார்பில் ஏ.கே.பி.சின்ராஜ், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உபி டிராக்டர் விபத்து: பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு! விபத்துக்கு இதுதான் காரணமா?