திருச்சி: திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தின் மணிமண்டபம் தமிழக முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் தமிழ்நாடு பார்க்கவகுல சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தின் மணிமண்டபத்தில் அவரது முழு உருவச் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் தொடர்ச்சியாகப் பார்க்கவகுல சங்க மாநிலத் தலைவர் பாண்டுரங்கன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "பெரியாரால் நீதிக் கட்சி உருவாக்கும் போது கட்சியின் தலைவராக சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் இருந்து நிர்வகித்தார்கள். நீண்ட நாட்கள் கோரிக்கையான நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்திற்குத் திருச்சியின் மையப் பகுதியில் மணிமண்டபம் கட்டிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் எங்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதே போல் நீண்ட காலமாகத் தமிழக அரசுக்குப் பார்க்கவகுல சமுதாயத்தின் கோரிக்கையான சட்டநாதன் கமிஷனில் இருந்து பார்க்கவகுல சமுதாயத்தை மோஸ்ட் பேக்வேர்ட் கமிட்டியாக (MBC) சேர்க்க வேண்டும். ஏனென்றால் சிறுபான்மை மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், நிறையப் பேர் விவசாயத்தைச் சார்ந்து இருப்பதால் தற்போது உள்ள அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் சமூகத்தை MBC பிரிவாக மாற்றித்தர வேண்டும். மேலும், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த நபருக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: தனியாக போட்டியிட தயார்.. செல்வப்பெருந்தகை பதிலின் பின்னணி என்ன?