ஈரோடு: ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனுக்கு கஞ்சா கொடுக்க முயன்ற தாய், தந்தையை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள பார்வதி கிருஷ்ணா வீதியில் சந்திரசேகர் - தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதாப் என்ற மகன் உள்ளார். இந்த பிரதீப், குற்றச்செயல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவல் சிறைவாசியாக ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், மகனைப் பார்ப்பதற்காக நேற்று (பிப்.20) சந்திரசேகரும், தீபாவும் கிளைச் சிறைக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, மகன் பிரதாப்பிற்கு கொடுப்பதற்காக 30 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, கிளைச் சிறையின் கண்காணிப்பாளர் முத்துசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நகர காவல்நிலைய போலீசார், சந்திரசேகர் மற்றும் தீபாவை கைது செய்ததோடு, அவர்கள் வைத்திருந்த 30 கிராம் எடையிலான கஞ்சா பொட்டலத்தையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், சிறைச்சாலைக்கு உள்ளேயே கஞ்சா பொட்டலங்களை எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரூரில் ரவுடி ராமர் பாண்டி கொலை.. உடலை வாங்க மறுத்து தொடரும் உறவினர்கள் போராட்டம்!