தஞ்சாவூர்: திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் சிவதலங்கள், நான்கு வீதிகளிலும் சிவன் கோயில்களுக்கும் அமைந்துள்ளதால் இது பஞ்சலிங்கத்தலம் என்ற பெருமை பெற்றதாகும். இத்தலத்தில் சந்திரன் விநாயக பெருமான், அம்பிகை, அகத்திய முனிவர் உள்ளிட்ட முனிவர்களுக்கும், இறைவன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் காட்சியளித்துள்ளார்.
இது காசிக்கு நிகரான தலமாகும் என வரலாறு கூறுகிறது. இத்தகைய பெருமை கொண்ட தலத்தில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா பத்து நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் திருவிழா கடந்த 16ஆம் தேதி செவ்வாயன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும், பல்வேறு வாகனங்களில் திருவீதியுலாவும் நடைபெற்றது.
தைப்பூசத் திருவிழாவின் 9ஆம் நாளான இன்று, தைப்பூச பஞ்ச ரதம் (எ) ஐந்து பெரிய மரத்தேர்களின் தேரோட்டத்தில், முதலில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான், தொடர்ந்து மகாலிங்கசுவாமி, சண்டிகேஸ்வரர் என ஐவரும், ஐந்து தனித்தனி பெரிய மரத்தேர்களில் எழுந்தருளினர்.
திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் ரிஷிகேஷ் ஆர்ஷி வித்யா பீட அறங்காவலர் குழு தலைவர் சுவாமி ஸாக்சாத் கிருதாநந்தா ஆகியோர் இணைந்து வடம் பிடித்துத் தொடங்கி வைத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பெருக்குடன், மகாலிங்கா, இடைமருதா என பக்தி கோஷங்கள் எழுப்பி ஐந்து தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தனித்தனி தேர்களில் உலா வந்த பஞ்சமூர்த்திகளையும் பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து 10ஆம் நாளான நாளை 25ஆம் தேதி வியாழக்கிழமை நண்பகல், திருவிடைமருதூர் காவிரியாற்றின் கரைக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் எழுந்தருள, அங்குத் தைப்பூச தீர்த்தவாரி வைபவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனதை மகிழ்ச்சியாக்கும் மெஹந்தி போட்டி... தஞ்சையில் சுவாரஸ்யம்!