சென்னை: வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2023 டிசம்பர் 25-ஆம் தேதி தனிப்படை போலீசார் இருவரையும் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், புழல் சிறையில் உள்ள இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை எனவும், குடும்ப உறுப்பினர் போல பணிப்பெண்ணை நடத்தியதாகவும், அவரை கல்லூரியில் சேர்த்து அதற்கான கட்டணத்தையும் தாங்களே செலுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த மனு இன்று (மார்ச்.01) மீண்டும் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அந்த விசாரணை அறிக்கையில் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணின் கல்விச் சான்றிதழ்களும் இணைத்து வழங்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதி எம்.நிர்மல்குமார், "காவல்துறை விசாரணையில் பல முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளது. மேலும், விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். அதனால், காவல் துணை கண்காணிப்பாளர் அல்லது உதவி ஆணையர் தகுதியில் உள்ளவர்களே வழக்கை விசாரிப்பது சரியாக இருக்கும் என்பதால், காவல்துறை இயக்குநர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 4 வயதில் குழந்தை இருப்பதைக் கருத்தில் கொண்டு, 2 வாரத்திற்கு பல்லாவரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் 10 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிவில் நீதிபதி தேர்ச்சி பட்டியல் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! என்ன காரணம்?