மதுரை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட ஜான்சிராணி பூங்கா, மறவர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரப் பணிகளை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "கடந்த 3 ஆண்டுகளாக மக்களின் நலன் கருதி, திமுக தலைமையிலான அரசு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளது.
கரோனா பேரிடர் காலத்தில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் ரகுராம் ராஜன் உள்ளிட்ட புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் அறிவுரையின் பேரில் செயல்படுத்தப்பட்டது. அதேபோல் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 13 லட்சம் பேரின் நகைக்கடன்கள் மற்றும் 1 லட்சம் பேரின் கூட்டுறவுக் கடன் உள்ளிட்டவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "மனிதநேயமும், செயல்திறனும் உள்ள மக்களாட்சியை சிறப்பான முறையில் திமுக செய்து வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு எல்லா வகையிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. ஒரு ரூபாய் வரியில், தற்போது 29 பைசா திரும்பத் தருவதை நாடாளுமன்றத்தில் பெருமையோடு கூறுகிறார்கள்.
உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிதியை வரவிடாமல் தடுக்கின்றனர். பேரிடர் காலங்களில் உதவி கேட்டாலும் தருவதில்லை. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொள்ள மற்றும் அவர்களுடைய திட்டங்களைச் செயல்படுத்த நம்மை வற்புறுத்துகின்றனர்.
இப்படிப்பட்ட ஒன்றிய ஆட்சி இனி நீடித்தால் இந்தியாவுக்கும், ஜனநாயகத்திற்கும் கடும் தோல்வி என்று தான் கருத வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனிமேல்தான் பிரதமர் மோடி செய்யப்போகிறாரா? தேர்தல் பத்திரம் என்ற முறையின் மூலம் ஊழலை நிர்வாகப்படுத்தியதுதான் பிரதமர் மோடியின் சாதனை.
நாட்டின் ஜனநாயகம் ஏற்கனவே செத்துவிட்டது. யாருக்கெல்லாம் நாட்டின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் பற்று உள்ளதோ, அவர்கள் எல்லாம் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு திரளாகச் சென்று, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்சி மக்களுக்கு திமுக செய்த துரோகங்கள் என்ற பெயரில் பிரேமலதா விஜயகாந்த் அடுக்கிய பட்டியல்!