மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தமிழறிஞர் சீகன்பால்குவின் இல்லத்தில் மயிலாடுதுறை நகர்ப்புற ஓவியர்கள் குழுவினர் 7 பேரின் பிரத்யேக ஓவிய கண்காட்சி இன்று துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஓவிய கண்காட்சியை பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் முத்துக்குமரன் துவங்கி வைத்தார்.
இதில் ஆசியாவின் முதல் சூரிய ஒளி ஓவியர் விக்னேஷ், சூரிய ஒளிக்கதிர்களை உருப்பெருக்கியால் குவித்து மரப்பலகையில் நெருப்பை உருவாக்கி வரைந்த மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள், தோனி, விராட் கோலி, ரோகித் ஷர்மா போன்ற கிரிக்கெட் வீரர்களின் படங்கள் மற்றும் முப்பரிமாண ஓவியம், தத்ரூப பெயிண்டிங் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும் பென்சில் ஓவியர் முத்துக்குமாரின் சிறுசிறு கோடுகளால் வரையப்பட்ட மழைசாரல் போன்ற கோட்டு ஓவியங்கள், கைவினை கலைஞர் அட்சயாவின் கொட்டாங்குச்சியில் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், முட்டை ஓடுகள், பல்பு பாட்டில்களில் வரைப்பட்ட ஓவியங்கள், கனிமொழி என்ற ஓவியரால் வரையப்பட்ட கரிதூள் ஓவியம், புள்ளிகளால் வரையப்பட்ட அப்துல்கலாமின் ஓவியம் மற்றும் ஓவியக்கல்லூரி மாணவர்களின் தத்ரூப ஓவியங்கள் என 300க்கும் மேற்பட்ட ஓவியங்களின் கண்காட்சியை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு கண்டு ரசித்தனர்.
தமிழில் முதன் முதலில் காகிதத்தில் அச்சிட்ட தமிழறிஞர் சீகன்பால்குவை நினைவு கூறும் வகையில், ஆசியாவின் முதல் சூரிய ஒளி ஓவியரான விக்னேஷ், சீகன் பால்கு வாழ்ந்த இல்லத்தின் எதிரே சூரிய ஒளி கதிர்களை பூதக் கண்ணாடியில் குவித்து சீகன் பால்கு முகத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தினார். இதனை அங்கிருந்த மாணவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்; மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மரியாதை!