நெல்லை: திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் 2019-ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி சேவல் ஒன்றை வாங்கி வளர்த்து வந்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக அந்த சேவலை தன் வீட்டில் வைத்து பாசத்துடன் வளர்த்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சேவல் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி சேவல் உயிரிழந்தது. எனவே, வீட்டில் ஒருவராக வளர்க்கப்பட்ட சேவல் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் செல்வம் மனம் உடைந்துள்ளார்.
இதனையடுத்து, ’சிங்கம்’ எனப் பெயரிடப்பட்ட தன் சேவல் உயிரிழந்துள்ளதை துக்கம் தெரிவிக்கும் விதமாக, செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் சேர்ந்து மனிதர்களுக்கு வைக்கும் கண்ணீர் அஞ்சலி பேனர் போல் தன் சேவலுக்கும் கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்து அந்த பகுதியில் ஒட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் உள்ள அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும், அந்த கண்ணீர் அஞ்சலி பதாகையில் சேவலின் தோற்றம் மற்றும் மறைவு குறிப்பிடப்பட்டதுடன், தங்கள் ’சிங்கம்’ என அழைக்கப்படும் சேவல் மறைந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கும் ஜி.கே.எம் பாய்ஸ், பேட்டை என அவர்கள் ஊருடன் சேர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த பதிவு சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:செல்ஃபிக்கு போஸ் கொடுப்பது எப்படி? உதடுகளின் அசைவுக்கு இத்தனை அர்த்தமா?...