கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மே 7ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த நபரின் உடமைகளை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவருடைய பையில் தங்கக் கட்டிகள் மற்றும் தங்கச்செயின் மறைத்து எடுத்து வரப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரிடம் இருந்தவற்றை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் இருந்து 90.28 லட்சம் ரூபாய் மதிப்பில் 1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்கக் கட்டிகள் மற்றும் செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாலை விரிவாக்கம் செய்யவில்லை.. ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தை மூடிய பொதுமக்கள்! - Anaimalai Town Panchayat