மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே 11 ஊர்கள் அடங்கிய பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் எனும் கனிம வளத்தை சுரங்க நடவடிக்கையின் மூலம் எடுப்பதற்கு கடந்த நவம்பர்-7 அன்று வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் ஏலம் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.
டங்ஸ்டன் திட்டம் செயலுக்கு வந்தால் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுத் தளம் முற்றிலும் நாசமாகும். முல்லைப் பெரியாறு பாசனத்தில் பயன்பெறும் வேளாண் நிலங்கள் வேளாண்மைக்குப் பயன்படாமல் தரிசு நிலங்களாகும். டங்க்ஸ்டன் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் தமிழ் வரலாற்றைப் பறைசாற்றும் தமிழி எழுத்துக்கள் கொண்ட புகழ்பெற்ற மாங்குளம் கல்வெட்டு , சமணப்படுகைகள், பாண்டியர் கால குடைவரைகள், நாட்டார் - முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் ஆகியவையும் அமைந்துள்ளன.
அழகர் கோயில், காப்புக் காடுகளும் நூற்றுக்கணக்கான ஏரி, குளம், குட்டைகளும் அமைந்துள்ளன. இவை அனைத்தும் சுரங்க நடவடிக்கையால் பாழ்படும் என இப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராடி வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரக்கூடாது மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொள்கை முடிவை அறிவித்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக நவம்பர் -23 அன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: அரசுக்குக் கடிதம் - மதுரை ஆட்சியர் உறுதி!
இதனை அடுத்து இன்று(நவ.23) நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், தெற்குத்தெரு, நரங்சிங்கம்பட்டி, மாங்குளம், புலிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளரிப்பட்டி, கிடாரிப்பட்டி, ஆமூர், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கம்பூர், கேசம்பட்டி,, கருங்காலக்குடி, அய்யாபட்டி, கச்சிராயன்பட்டி, தும்பைபபட்டி, மதுரை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரும்பனூர், கொடிக்குளம், சிட்டம்பட்டி, பனைக்குளம், தாமரைப்பட்டி, பூலம்பட்டி, இடையபட்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திடியன், கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள வன்னிவேலம்பட்டி என மதுரை மாவட்டத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சிவகங்கை மாவட்டம் கிருங்காகோட்டை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு ஊராட்சிகளிலும் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள டங்ஸ்டன் கனிம சுரங்கம் தொடர்பான தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளது என டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்