கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அங்குள்ள அதிகாரிகள் தங்களைக் கொத்தடிமைகள் போன்று நடத்துவதாகவும் இதற்குரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் பகுதி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்க உறுப்பினர் ரத்தினகுமார் ,"எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூய்மை பணியாளர்களுக்கு 6 மணி முதல் 2 மணி வரையிலான பகுதி நேர வேலை அளிக்கப்பட வேண்டும். தற்பொழுது வெயில் காலம் என்பதால் அதனை கருத்தில் கொண்டு 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே வேலை வாங்க வேண்டும். பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
மேலும், பணித்தள பொறுப்பாளர்கள் வயது வித்தியாசம் பாராமல் தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசுவதாகவும், கொத்தடிமைகள் போன்று வேலை வாங்குகிறார்கள், மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
பண்ணைகளில் கூலி தொழிலாளிகளை எப்படி வேலை வாங்குவார்களோ அது போன்று தூய்மை பணியாளர்களையும் வேலை வாங்குகிறார்கள். லாரிகளில் ஏறுவது போன்று ஆண்கள் செய்கின்ற வேலைகளையும் பெண்களைச் செய்ய வைப்பதாகவும் தெரிவித்தார்".
பின்னர் பேசிய பெண் தூய்மை பணியாளர் வசந்தாமணி, "தாங்கள் அனைவரும் எந்த குறையும் இல்லாமல் பணி செய்து வருகிறோம். ஆனால் தற்போதைய சூழலில் எங்களுக்குச் சுயமரியாதை என்பதே கிடைக்காத வண்ணம் உள்ளது. நாய்களைப் போன்று துரத்தப்படுகிறோம்.
எங்கள் பிரச்சனைகளைக் கூறினால், எங்களைச் சமாதானப்படுத்துவதற்குத் தான் கவுன்சிலர்கள் அரசியல்வாதிகள் ஆகியோர்கள் எல்லாம் வருகிறார்களே தவிர, எங்கள் பிரச்சனைகளுக்கு யாரும் தீர்வு காண்பதில்லை என தெரிவித்தார். பணித்தள பொறுப்பாளர்கள் கோகிலா, சங்கரி ஆகிய இருவரும், தங்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறார். மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரியத் தீர்வை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார்".
இதையும் படிங்க: கஞ்சா பொட்டலத்துடன் முதல்வரிடம் மனு அளிக்க வந்த பாஜக நிர்வாகி கைது! - Petition To Stalin With Ganja