தஞ்சாவூர்: வேளாண் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி நோக்கி விவசாயிகள் வருவதை போலீசார் தடுத்த நிலையில், அவர்கள் அனைவரும் ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயச் சங்கங்களின் தலைவர்களுடன் சண்டிகரில் 3 கட்டங்களுக்கும் மேலாக மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், அந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு சுமூகமான உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதன் அடிப்படையில். நாடு முழுவதும் இன்று (மார்ச் 10) ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
அந்த வகையில், கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசம் ரயில் நிலையத்தில் இன்று (மார்ச் 10) விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில் மறியல் செய்ய முயன்ற 40க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.
இந்நிலையில், அங்கு பணியிலிருந்த காவலர் ஒருவர், மது அருந்தி மது போதை மயக்கத்திலிருந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து அந்த காவலர் மீது விசாரணை நடத்த டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பாபநாசத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்கார் விருது எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது.. அதன் பின்னணி என்ன?