தூத்துக்குடி: குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் தென்னிந்தியப் பகுதியின் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் 18ஆம் தேதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் 17ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கையும், 18ஆம் தேதி மிக கனமழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், 19ஆம் தேதி கனமழை எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதன பொருள்களை கவனமாக கையாள வேண்டும். மேலும், மருதூா், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூா் முதல் புன்னக்காயல் வரை தாமிபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம்.
மேலும், பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீா் நிலைகள் ஆகியவற்றின் அருகில் செல்லவேண்டாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.