கன்னியாகுமரி: கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஓ.பி.எஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழக அரசியல் வரலாற்றில் தொண்டர்களுக்கு மரியாதையை உருவாக்கியவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர். ஆனால் பொய்யான பொதுக்குழுவைக் கூட்டி, பாமர மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கத்தைத் தனது கையில் வைத்து உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
ஒரு சாதாரண தொண்டர் கூட இயக்கத்தின் உச்சபட்ச பொறுப்பிற்கு வர முடியும் என எம்.ஜி.ஆர் விதிகளை உருவாக்கினார். ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை விதைத்து இயக்கத்தின் விதிகளை மாற்றி விட்டார். உயிர்த் தியாகம் செய்து உருவாக்கப்பட்ட இயக்கத்தை, ரவுடிகளை கொண்டு வந்து பொதுக்குழு நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு, ஊராட்சித் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சித் தேர்தல் மட்டுமின்றி, கொங்கு மண்டலமான ஈரோடு இடைத் தேர்தலின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்களைச் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க என்னிடமும், டி.டி.வி.தினகரன் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த தேர்தலில் தோல்வியைப் பெற்றுக் கொடுத்தவர் எடப்பாடி" என்று விமர்சித்தார்.
இதனை அடுத்து சசிகலா சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "அண்ணா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தச் சென்ற நேரத்தில் சசிகலாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மரியாதை நிமித்தமாக நாங்கள் சந்தித்துக் கொண்டோம், அரசியல் குறித்துப் பேசவில்லை" என்று பதிலளித்தர்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை ஆதரிக்கிறோம். மிக சிறந்த நிர்வாகத்தை இந்த நாட்டிற்கு அவர் தந்திருக்கிறார். எனவே, மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடியே பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோம். கட்சி ஒன்றாக இணையக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். அவரது எண்ணம் பலிக்காது. சில கட்சிகள் எங்களுடன் கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை முடிந்ததும் கூட்டணி குறித்து அறிவிப்போம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "குடியரசு தினத்தில் மாவட்ட ஆட்சியர் விருதுகளுக்கு அரசாணை இல்லை" ஆர்டிஐ மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!