சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் பாஜக கூட்டணி தலைவர்களைச் சந்தித்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மருது அழகுராஜ் தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு பாஜகவுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை பசுமை வழி இல்லத்தில் செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "அரசியல் நிலைப்பாடு என்பது வேறு, தேர்தலில் என்ன செய்யப் போகிறோம் என்பது வேறு.
எங்களைப் பொறுத்தவரை, மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்களது அரசியல் நிலைப்பாடு. நிலையான ஆட்சியைத் தரக்கூடிய வாய்ப்பு மோடிக்கும் அவரைச் சார்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கும் தான் உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு எங்களுடைய தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம்" என்றார்.
பாஜக அழைக்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தவர், "பாஜக விருந்தினர்களை அழைத்துள்ளது, ஆனால் நாங்கள் வீட்டில் உள்ளவர்கள். விருந்திற்கு அழைத்தவர்களை விட்டுவிடு வீட்டில் உள்ளவர்கள் முதலில் சாப்பிடுவது இல்லை, கடைசியாகத்தான் சாப்பிடுவார்கள், அதன் பண்பாடு. விருந்தினர்களை அழைத்துள்ள அவர்கள் வீட்டில் உள்ளவர்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேண்டும் என்பது பாஜகவின் எண்ணமாக உள்ளது. அவர்களது முயற்சியில் நாங்கள் தலையிட முடியாது என்றும் எங்கள் அணியைப் பொறுத்தவரை நாற்பது தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். ஓ பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட அறிக்கை மட்டுமே அதிகாரப்பூர்வ அறிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் மருது அழகுராஜ் போன்றவர்கள் தங்களுடைய தனிப்பட்ட ஆதங்கத்தைச் சொல்லி உள்ளார்கள்" என கூறினார்.
இதற்கிடையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "பாஜக தலைமையுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். காலம் கனிந்து வருகிறது. உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் அவரை சந்திக்க நாங்கள் நேரம் கேட்கவில்லை" என்றார்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் கடைசியாக நல்லாட்சி கொடுத்தவர் ஜெயலலிதா! எம்ஜிஆருக்கு எதிரான ஆட்சி நடக்கிறது"- பிரதமர் மோடியின் திட்டம் என்ன?