புதுக்கோட்டை: விராலிமலை அருகே தனியார் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அத்திப்பள்ளம் என்ற கிராமத்தில் வேல்முருகன் என்பவர் சொந்தமாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அந்த பட்டாசு ஆலையின் பின்புறம் பட்டாசு குடோன் உள்ளது. இந்த குடோனில் விற்பனை செய்தது போக மீதமுள்ள பட்டாசுகளை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், குடோனை விரிவாக்கம் செய்பதற்கு கொட்டகை போடும் பணி தற்போது நடைபெற்று வந்துள்ளது. அப்போது, தகர சீட் போடுவதற்காக வெல்டிங் வைத்த போது அதிலிருந்து பரவிய தீப்பொறி அருகே உள்ள பட்டாசு குடோனில் பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில், குடோனுக்கு உள்ளே இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறிய நிலையில், குடோனின் உள்ளே இருந்த குடோனின் உரிமையாளர் வேல்முருகனின் தம்பி கார்த்திக் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். இதனையடுத்து, விபத்தில் படுகாயங்கயமடைந்த தொழிலாளி ஒருவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், உரிய அனுமதியுடன் பட்டாசு கடை மற்றும் குடோன் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும், வெல்டிங் வைக்கும் பணி நடந்த போது அதிலிருந்து சிதறிய தீப்பொறி பட்டு இந்த விபத்து நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விராலிமலை அருகே தனியார் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் கோர விபத்து: பைகா பழங்குடியின பெண்கள் 17 பேர் பலி! - Kawardha Accident Update