சென்னை: அண்ணா சாலையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் படித்து வரும் மன வளர்ச்சிக் குன்றிய மாணவியை ஸ்னாப் ஷாட் செயலி மூலம் ஏமாற்றி 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நந்தனம் கல்லூரி மாணவன் நரேஷ் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மணி என்கிற சுப்பிரமணி மற்றும் அம்பத்தூரை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சேலத்தை சேர்ந்த சபரீஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் பலாத்கார வழக்கில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது சேலத்தை சேர்ந்த சபரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தோசை தடியா போட்டு தரமாட்டியா:
சென்னை, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் அண்ணாநகரை சேர்ந்தவர் ராமஜெயம் (50). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், தனது வீட்டு வாசலில் ஓட்டல் ஒன்றினை கடந்த ஒரு மாதமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் இவர் கடைக்கு இரண்டு பேர் சாப்பிட வந்துள்ளனர். அப்போது, அவர்கள் தோசை போட்டு தருமாறு கேட்டுள்ளனர்.
பின்னர் கொடுத்த தோசை சின்னதாகவும், மெல்லியதாக இருக்கிறது எங்களுக்கு தடியாக தோசை வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை கண்ட ஓட்டல் உரிமையாளர் ராமஜெயம் போட்டு தருகிறேன் என கூறியபோது, அவர்கள் தோசை குறித்து மேலும் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றி அங்கிருந்து கிளம்பிய இருவர் 10.30 மணியளவில் மேலும் நான்கு பேரை அழைத்து வந்து தகராறு செய்துள்ளனர்.
இதனால் கைகலப்பாகி ராமஜெயத்தை அனைவரும் சேர்ந்து தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்கள் தப்பித்து செல்லும் காட்சியை ராம ஜெயம் குடும்பத்தினர் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோ ஆதாரத்துடன் சேலையூர் காவல் நிலைத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது. இதனிடையே காயத்துடன் மாடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் ராமஜெயம் சிகிச்சை பெற்று வருகிறார். ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வழக்கறிஞருக்கு கத்திக்குத்து:
கோட்டூர்புரம், மண்டபம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான மதன். இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதான அஜித்குமார் பெயிண்டராக உள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு சென்னை கோட்டூர் மண்டபம் தெருவில் வழக்கறிஞர் மதனும், அஜித்குமாரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை தலைக்கு ஏறிய நிலையில், இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் மதன் நண்பருக்கும், அஜித் குமாரின் தம்பிக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனை பற்றி பேசப்பட்டுள்ளது.
அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது அஜித் குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதனை குத்தியுள்ளார். அதனை அடுத்து மதன் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகார் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.