சென்னை: சென்னை அடுத்த தாம்பரத்தில் இருந்து முடிச்சூர் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலத்தின் இறக்கத்தில் இன்று (ஆக.05) காலை தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் டிராக்டர் வாகனத்தை நிறுத்திவிட்டு குப்பைகளை சேகரித்து வந்துள்ளனர்.
அப்போது மேம்பாலத்தில் இருந்து தக்காளி லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று அதிவேகமாகச் சென்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் மீதும், டிராக்டர் மீதும் மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இதில் தூய்மை பணியாளர் ஒருவர் தக்காளி லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனத்திற்கும் டிராக்டருக்கும் இடையே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் இரண்டு தூய்மை பணியாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், படுகாயங்களுடன் இருந்த தூய்மைப் பணியாளர்களை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதேபோல, இந்த விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்விற்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதன் தொடர்ச்சியாக, இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் இந்த விசாரணையில், விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தர்மா (35) என்பதும், இவர் குடும்பத்துடன் தாம்பரம் அருகே தங்கி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாம்பரம் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், உடன் பணிபுரிந்த சக தூய்மை பணியாளர்கள் சாலையில் கதறி அழுது நிகழ்வு காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தூய்மை பணியாளர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தக்காளி லோடு ஏற்றி வந்த சரக்கு வாகன ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியதாகவும், அவரை குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், இச்சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வீட்டு கிணற்றில் இறங்கிய இருவர் உயிரிழப்பு.. விஷவாயு தாக்கி மரணமா? - தூத்துக்குடியில் நடந்தது என்ன?