சென்னை: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே கிழக்கு ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், தனது குடும்பத்துடன் சென்னை சிட்லபாக்கத்தில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில், சிட்லபாக்கம் சர்வமங்கல நகர் இரண்டாவது பிரதான சாலை வழியாகத் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அப்பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையைக் கவனிக்காமல், வாகனத்தில் வேகமாகச் சென்றதால் நிலை தடுமாறி அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விழுந்தனர். இதில் சிறுவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மின் கம்பத்தின் மீது மோதியதில், பலத்த காயமடைந்த கோவிந்தராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக சிறுவர்கள் இருவரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிட்லபாக்கம் போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில், புதியதாக அமைக்கப்பட்ட வேகத்தடையால் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் கொடுத்த விளம்பரத்தில் சீன கொடி.. திமுகவின் தேசப்பற்று குறித்து பிரதமர் விமர்சனம்.. கனிமொழி ரியாக்ஷன் என்ன?