திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும், மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சட்ட விரோதமாக தங்கம் உள்ளிட்ட பொருட்களைக் கடத்தி வருவதும், விமான நிலையங்களில் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி விட்டது. அதனைத் தடுக்கவும், கடத்தலில் ஈடுபடுபவர்களைப் பிடிக்கும் முயற்சியிலும் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் பயணிகளின் உடைமைகள் மற்றும் விமான நிலைய உள்பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, இலங்கையில் இருந்து வந்த அடையாளம் தெரியாத பயணி ஒருவர், பேக் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவரை கழிவறைக்கு அருகே போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
அதனைக் கண்ட விமான நிலைய அதிகாரிகள், அந்த கவரை சோதனை செய்தபோது, அதில் தங்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து, யார் இந்த தங்கத்தைக் கடத்தி வந்தது என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த கவரில் சுமார் 1 கிலோ 56 கிராம் அளவிலான தங்கம் இருந்துள்ளது. அதன் மதிப்பு ரூ.1 கோடியே 3 லட்சம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சமீப காலமாகவே திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், பாம்புகள் போன்ற அரிய வகை உயிரினங்களைக் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும், பயணிகள் போர்வையில் குருவிகள் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிங்க: வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. சென்னையில் சவரன் ரூ.48,840க்கு விற்பனை!