தென்காசி: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அப்துல் கலாம் ஸ்கேட்டிங் சென்டர் சார்பில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில், முவித்ரா என்ற 7 வயது சிறுமி 30 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 40 நிமிடங்களில் கடந்து, உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயகணேசன் - கோகிலா தம்பதியினர் மகள் முவித்ரா. 7 வயதான அச்சிறுமி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்கேட்டிங் மூலம் 30 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 40 நிமிடங்களில் கடந்து உலக சாதனை புரிந்துள்ளார்.
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து பனவடலிசத்திரம் சென்று மீண்டும் பனவடலிசத்திரம் பகுதியிலிருந்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வரை வரை 30 கிலோமீட்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சியை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
ஸ்கேட்டிங்கில் அசுர வேகத்தில் சென்ற சிறுமி முவித்ரா, தரப்பட்ட இலக்கு தூரத்தை 1 மணி நேரம் 40 நிமிடங்களில் கடந்து, உலக சாதனை படைத்தார். சிறுமியின் இந்த உலக சாதனையை யுனிகோ வேர்ல்டு ரிக்கார்டு என்ற அமைப்பு அங்கீகாரம் செய்துள்ளதாகவும் அப்துல் கலாம் ஸ்கேட்டிங் சென்டர் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் சிறுமி முவித்ரா-க்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் சக்திவேல், பாலாநகர் மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி சரவணன், நகரச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறுமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சிறுமியின் சாதனை குறித்துப் பேசிய சிறுமியின் தாய், "என்னுடைய குழந்தை தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து, ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்வாள்.
எனது மகளை ஸ்கேட்டிங் பயிற்சியாளர் தினமும், மூன்று மணி நேரங்களிலிருந்து நான்கு மணி நேரங்கள் சங்கரன்கோவில் பகுதியில் சாலைகளிலும், ஒரு சில பள்ளியின் விளையாட்டு மைதானத்திலும் அழைத்துச் சென்று இந்தளவுக்கு முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வந்துள்ளார். குழந்தை விளையாட்டு மட்டுமல்ல யோகா மற்றும் படிப்பிலும் அதிகம் கவனம் செலுத்தி, தற்பொழுது யூனிட் வேர்ல்ட் ரெக்கார்ட் படைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மேலும், இது போன்று கிராம பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முன்னேறுவதற்கு தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசும் எங்களுக்கு ஒரு விளையாட்டு மைதான அமைத்துக் கொடுக்க வேண்டும். இது கிராம குழந்தைகள் முன்னேறுவதற்கு வழிவகுக்கும். மேலும் பள்ளிப்பருவத்திலே பல ரெக்கார்டு படைத்தது உள்ளது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என கூறினார்.
இதையும் படிங்க: கணவருக்காக தொடங்கிய ஆட்டோ பயணம்.. மகளிர் தினத்தில் மிளிரும் தென்காசி மர்ஜான்!