சென்னை: கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் குறித்து வார இதழான நக்கீரன் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தது. இதனைக் கண்டித்து நக்கீரன் இதழுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்து மக்களின் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் அவரது மகனும், கட்சியின் இளைஞரணித் தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்துகொண்டு பேசினார்.அப்போது, "ஈஷா யோகா மையத்திற்கு எதிராக செய்தி வெளியிடும் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், நாக்கை அறுத்துவிடுவோம்" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் இறந்தவரின் உடலை மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்..!
இதுதொடர்பாக திமுக நிர்வாகி அளித்த புகாரின் பேரில், கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனிடையே தான் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜி தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓம்கார் பாலாஜி கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அவரை நோக்கி நீதிபதி கடுமையாக கேள்விகளை முன்வைத்தார். அதற்கு ஓம்கார் பாலாஜி, "அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் அப்படி பேசிவிட்டேன்" என்று குறிப்பிட்டதோடு, மன்னிப்பு கோர தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதனால் முன் ஜாமீன் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, அர்ஜூன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜியை போலீ்ஸ் கைது செய்ய தடையில்லை என்று உத்தரவிட்டார். அத்துடன், முன் ஜாமீன் கோரி ஓம்கார் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவ 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.