சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள டாக்ஸி பிக்கப் பாயிண்டிற்கு பயணிகள் நடந்து சென்று கொண்டிருந்த போது, 70 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, துடித்து கீழே விழுந்த நிலையில், அவரை மீட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்காக பிக்கப் பாயிண்ட் கவுண்டர் ஒன்று விமான நிலைய வளாக கீழ்த்தளத்தில் உள்ள வருகை பகுதிக்கு அருகே செயல்பட்டு வந்தது. வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டுப் பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் உள்ள கால் டாக்ஸி கவுண்டருக்கு சென்று அவர்கள் செல்லும் இடத்திற்கு கார் புக் செய்து செல்வார்கள். இது பயணிகள் செல்வதற்கு ஏதுவாக இருந்தது.
இந்த நிலையில் சென்னை ஏர்போர்ட் அத்தாரிட்டி அதிகாரிகள் இனி விமான நிலைய வளாகத்தில் வந்து கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றக்கூடாது எனவும், சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் பிக்கப் பாயிண்டை மாற்றி அமைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
தற்போது கார் பார்க்கிங் மூன்றாவது தளத்தில் கால் டாக்ஸி பிக்கப் பாய்ண்ட் அமைத்தால் பயணிகள், வயதானவர்கள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட பயணிகள் வரும்போது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவும், அதனால் கால் டாக்ஸி பிக்கப் பாயிண்டை சென்னை விமான நிலைய வளாகத்திலேயே அமைக்க வேண்டும் எனவும் சென்னை ஏர்போர்ட் அத்தாரிட்டி அதிகாரிகளிடம் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. தொடர்ந்து அனைத்து பயணிகளும் சோதனைகள் முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே வந்து கார் பார்க்கிங் மூன்றாவது தளத்தில் அமைத்துள்ள பிக்கப் பாய்ண்ட்க்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சுமார் 70 வயது மதிக்கத்தக்க பழனி என்ற முதியவர் அவரது மகளுடன் கார் பார்க்கிங் உள்ள மூன்றாவது தளத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில், முதியவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்து துடித்துள்ளார். அதனைக் கண்ட அவருடன் வந்த மகளும் கதறி அழுதுள்ளார். அதைத் தொடர்ந்து, அருகே இருந்த டாக்ஸி ஓட்டுநர்கள் முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தந்தை வலியால் விழும்போது, அவரது மகள் கதறி அழும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான பயணிகள் கார் பார்க்கிங் மூன்றாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்கப் பாயிண்டிற்கு செல்லும் பொழுது கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருவதால் பயணிகளின் நலன் கருதி விமான நிலைய வளாகத்திலேயே பிக்கப் பாய்ண்டை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோயிலுக்கு சேதம் ஏற்படாத வகையில் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு!