திருநெல்வேலி: திருநெல்வேலி அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சுப்பம்மாள்(80). இந்நிலையில், இவர் உறவினர்கள் துணையுடன் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “வயது முதிர்வு காரணமாக எனது மகன் மூலம் ரேஷன் பொருள்களை வாங்கி வருகிறேன். இந்த நிலையில் எனது குடும்ப அட்டையை ரத்து செய்ததால், அதை புதுப்பிப்பதற்காக கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி மனு அளித்திருந்தேன். ஆனால், கடந்த 13ஆம் தேதி ரேஷன் அட்டை வழங்காமல் மனு நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. நான் உயிரோடு தான் இருக்கிறேன். ரேஷன் மூலம் கிடைக்கும் பொருள்களை வைத்து தான் எனது வாழ்க்கையை நடத்தி வருகிறேன். எனவே, எனது குடும்ப அட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மூதாட்டி உயிரோடு இருக்கும் போது அவரை இறந்ததாக கருதி ரேஷன் அட்டையை தகுதி நீக்கம் செய்தது எவ்வாறு? அதற்கு இறப்பு சான்றிதழ் தேவை இல்லையா? மீண்டும் அவர் அட்டை கேட்டு விண்ணப்பித்த போதும் களத்தில் சென்று விசாரிக்காமல் நிராகரித்தது சரியா? என்று பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு!
இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் விசாரித்த நிலையில், இ-சேவை மையம் மூலமாக மனு அளிக்கப்பட்டு பாட்டியின் ரேஷன் அட்டை நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மனு அளிக்க வந்த மூதாட்டி சுப்பம்மாள் கூறுகையில், “ எனது பெயரில் உள்ள நேஷன் அட்டைக்கு பொருள்கள் தருவதில்லை. நான் இறந்துவிட்டதாக கூறுகின்றனர். இது குறித்து நான் முன்னதாக மனு அளித்திருந்தேன். ஆனால், எனது மனு நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. எனக்கு குடும்ப அட்டையை வழங்க வேண்டும்” என் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கிடையில், கடந்த காலங்களில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வரும் முதியவர்களை, அழைத்து வருவதற்கும், கொண்டு விடுவதற்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில், கொக்கிரகுளம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டன.
ஆனால், கடந்த ஆண்டு பெய்த மழையில் வாகனம் பழுதாகியுள்ளது. அவை தற்போது வரை சரி செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் ,இன்று மனு அளிக்க வந்த மூதாட்டி சுப்பம்மாள் நடக்க முடியாமல் உறவினர்கள் கை தாங்கலாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்