சென்னை: சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் 25-வது மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவொற்றியூர் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய 105 பணிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை கோரிக்கைகளாக தெரிவித்து அதனை நிறைவேற்ற வேண்டுகோள் வைத்தனர். இதுமட்டும் அல்லாது, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், திருவொற்றியூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட 5-வது வார்டு திமுக கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் கூறும்போது, "என்னுடைய வார்டில் அமைந்துள்ள நெய்தல் தெருவில் கடந்த 19ஆம் தேதியன்று இரவு பெய்யத் துவங்கிய மழை காலை வரை பெய்த நிலையில், மழை பெய்தபோதே அங்கு சாலை அமைக்க டெண்டர் எடுத்த நிறுவனத்தினர் சாலை போட்டுள்ளனர். பாதி பணிகள் முடிவடைந்த நிலையில், தகவலறிந்து நாங்கள் பணியை நிறுத்தினோம்.
ஆனால், அன்றிரவே அப்பகுதியில் சாலையை போட்டுள்ளனர். மழை பெய்யும் நேரத்தில் போடப்பட்ட சாலை என்பதால் அது தரமில்லாமலும், 5 ஆண்டுகள் கூட பயன்பாட்டில் இருக்காது என்ற நிலையிலும் உள்ளது. ஆகவே, உடனடியாக அந்த சாலையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதையும் படிங்க: தமிழக மாணவர்களின் கனவை சிதைக்கும் மத்திய அரசு - ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் தீர்மானம்
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "டோல்கேட் முதல் திருவொற்றியூர் வரை அமைந்துள்ள சாலை மிகுந்த சேதமடைந்து மேடு, பள்ளங்களாக இருப்பதை சரிசெய்ய வேண்டும். சாலையின் கீழ் உள்ள மழை நீர் கால்வாயின் துளைகள் சில இடங்களில் சாலையில் இருந்து இறங்கியும், சில இடங்களில் சாலையில் இருந்து 2 அடி உயரத்தில் இருப்பதையும் சரி செய்து சமன் செய்ய வேண்டும்.
அதேபோல, எர்ணாவூர் மேம்பால சுவற்றில் செடிகள் முளைத்து பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளது. எனவே, உடனடியாக பாலத்தின் சுவற்றில் உள்ள செடிகளை அகற்றி பாலத்தின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட 5-வது வார்டு நெய்தல் நகர்ப் பகுதியில் கடந்த 19ஆம் தேதியன்று போடப்பட்ட தார் சாலையை திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும், இதன் அடுத்த கட்டமாக சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்யும் ஆய்வு குழுவினர் நெய்தல் நகரில் போடப்பட்டுள்ள சாலையை ஆய்வு செய்ய உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.