சென்னை: சென்னை மதுரவாயல் வளசரவாக்கம் மண்டலம் 11 க்கு உட்பட்ட 144 மற்றும் 145 ஆவது வார்டு ராஜீவ் காந்தி தெரு, பட்டேல் சாலை பகுதியில் வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற வருவாய்த் துறையினர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடுகளை அளவீடு செய்தனர். அப்போது அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இருப்பினும் அக்டோபர் 15ஆம் தேதி வீடுகள் அகற்றப்படும் என நோட்டீஸ் ஒட்டினர்.
இதையும் படிங்க: மழை எச்சரிக்கைகள்: மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கைகள் என்ன சொல்லுகிறது?
இதனை அடுத்து இன்று அந்த பகுதியில் வீடுகளை அகற்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் வந்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தங்கள் பகுதிகளில் உள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு கடும் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சென்னை முழுவதும் கொட்டித்தீர்த்து வரும் நிலையில், வீடுகளை இடிக்கப்பட்டால் எங்கே செல்வது என்று தெரியாமல் கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் அதிகாரிகள் இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கனமழை காரணமாக வீடுகளை அகற்றும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்