நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் ராணுவ பயிற்சி பெற்ற 570 அக்னி ராணுவ வீரர்களை எல்லை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், நாட்டின் உள்ள பல இடங்களுக்கும் பணிபுரிய அனுப்பப்படுகின்றனர்.
இம்முகாமில், 46 வாரங்கள் மலையற்ற பயிற்சி, நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி, பேரிடர் பயிற்சி, எதிர் ராணுவத்தை எதிற்கும் பயிற்சி, வழங்கப்பட்டு 570 அக்னி ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி வெலிங்டன் உள்ள பேரக்ஸில் பயிற்சி மைதானத்தில் நடந்தது.
பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, ராணுவ வீரர்கள், சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, ராணுவ மைய தலைவரான கிருஷ்ண தேவதாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அக்னி வீரர்களுக்கு பரிசு கோப்பைகளும். பதக்கங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ வீரர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாக, அணி வகுத்து வந்த காட்சியை கண்டு பெருமிதம் அடைந்ததாக தெரிவித்தனர். மேலும், நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் பயிற்சி பெற்ற அக்னி ராணுவ வீரர்கள் தெரிவிக்கையில், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் பயிற்சி பெற்ற நாங்கள், எங்களை முழுமையாக நாட்டிற்கு அர்ப்பணிப்பதாகவும், எதிரிகளிடம் போராடி நம் நாட்டிற்கு திறம்பட பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், 47 வாரங்கள் தங்களுக்கு ராணுவ அதிகாரிகள் சிறப்பான பயிற்சி வழங்கினர் எனவும் பெருமையுடன் கூறினர்.