சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி, தொகுதிப் பங்கீட்டை முடித்து வருகின்றன. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தமிழகத்தில் திமுக, பாஜக, அதிமுக கூட்டணிகளிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது. அந்த வகையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான குழு பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்த அணி 10 தொகுதிகள் வரை பாஜக மேலிடத்தில் கேட்டு வரும் நிலையில், இன்னும் தொகுதி குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவரும் நிலையில், மறுபுறம் தனது ஆதரவாளர்களுடன் தங்களுக்கு ஏற்ற சுயேட்சை சின்னம் எது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இரட்டை இலையை நினைவூட்டும் வகையில், இரட்டை காதணி, இரட்டை மின் விளக்கு போன்ற ‘இரட்டை’ அடையாளம் கொண்ட சின்னங்களில் இருந்து சுயேட்சை சின்னத்தை கேட்டுப் பெற ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டமிட்டுள்ளனர். 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட போது, ஒரு விளக்கு எம்ஜிஆர் என்றும், மற்றொரு விளக்கு ஜெயலலிதா என்றும் பன்னீர்செல்வம் விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போதும் அதே பாணியில் இரட்டை மின் விளக்கு சின்னத்தை கேட்டுப் பெற பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜாஃபர் சாதிக் விவகாரம்: ஈபிஎஸ், அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!