தஞ்சாவூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக, தமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் வரதராஜன் அதிரடியாக கைது செய்யப்பட்டு கும்பகோணம் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீசாரின் விசாரணையில், தஞ்சாவூர் கும்பகோணம் அருகே அம்மாபேட்டை அருகில் உள்ள விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (63). ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளரான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு அமைப்பாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கும்பகோணம் அருகே திருவிசைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரிடம் ரூ.7 லட்சமும், திருபுவனத்தைச் சேர்ந்த முத்து என்பவரிடம் ரூ.7 லட்சமும் மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரிடமிருந்து சொத்து பத்திர ஆவணங்களையும் பெற்றுள்ளார்.
ஆனால், வரதராஜன் உறுதியளித்தபடி அரசு வேலையும் வாங்கித் தரவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம், வேலை வாங்கி தருவதாக கூறி வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் வரதராஜன் தலைமறைவாகியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட நபர்களான வினோத், முத்து மற்றும் பாஸ்கர் ஆகியோர் வரதராஜனை பிடித்து திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை பகுதியில் வைத்து பணம் கொடுத்துள்ள சூழலில், அது நாச்சியார்கோவில் காவல் நிலைய சரகத்தில் வருவதால், அதன் அடிப்படையில் நாச்சியார் கோவில் காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையிலான போலீசார், வரதராஜன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட வரதராஜனை கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். அதில், வரதராஜனை வருகிற ஆகஸ்ட் 1 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தூத்துக்குடி: மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவு.. 29 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி! - THOOTHUKUDI AMMONIA GAS LEAK