கரூர்: கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இனாம் நிலத்தில் குடியிருந்து வரும் மக்களை வெளியேற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கரூர் வருகை தந்த, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூர் வந்திருந்தார்.
அப்பொழுது வெங்கமேடு மக்கள், 100 ஆண்டுகளுக்கு மேலாக பல லட்ச ரூபாய் செலவு செய்து வீடு கட்டி குடியிருக்கும் நிலம் கோயில் இனாம் நிலங்கள் என்பதால், உடனடியாக காலி செய்ய வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை காவல்துறையை அழைத்து வந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறித்து முறையிட்டனர்.
சொந்த மண்ணில் அகதிகளாக்க திட்டமா?: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இனாம் நிலங்களில் வசிக்கும் மக்களை கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக்க அரசு முயற்சிக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் அனைத்தையும், அரசு மீட்டு விட்டதாக கூறுகிறது.
ஆனால் இன்னும் அரசு அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், கோயில் நிலங்களில், அரசு கட்டடங்கள் கட்டி செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு துணையாக நாம் தமிழர் கட்சி இருக்கும், மக்களை வீட்டை விட்டு அகற்றினால், வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க மாட்டோம். துணிவிருந்தால் இந்த அரசு மக்களை வெளியேற்றி பார்க்கட்டும்” என்று கூறினார்.
திராவிடர் கழகம்: இதனைத் தொடர்ந்து, தமிழ் தாய் வாழ்த்து பாடல் குறித்து சீமான் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுவதற்கு பதிலளித்த அவர், “நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் புதுச்சேரியில் பாடப்படும் பாரதிதாசன் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழகத்திலும் தமிழ் தாய் வாழ்த்தாக கொண்டுவரப்படும்.
தமிழகத்தை ஆளும் திமுக அரசும், திராவிட கழகமும், தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தமிழர் கழகம் என்பதற்கு பதிலாக திராவிடர் கழகம் என்று ஏன் வைத்தார்கள்?. தந்தை பெரியார் அவர் தமிழர் என்று வைத்தால் தலைமை ஏற்க முடியாது என்ற ஒற்றை காரணத்திற்காக திராவிடர் கழகம் என பெயர் சூட்டப்பட்டது.
இதை மறுக்க முடியுமா?. பெரியாரை தூக்கி பிடிப்பதாக கூறும் திமுக, பெரியாரைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது. பெரியார் மதுக்கடைகளை ஒழிப்பதற்காக தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். ஆனால் இன்றுள்ள அரசு மது கடைகளை ஏற்று நடத்துகிறது. பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று கூறிய பெரியார் கொள்கைகளை, கடவுளை ஏற்க மறுக்கும், நாம் தமிழர் கட்சி கூட தேர்தலில் போட்டியிட சரிபாதி இடங்களை பெண்களுக்கு வழங்கி, சம வாய்ப்பு வழங்குகிறது.
இதையும் படிங்க: "ஆர்எஸ்எஸ் சங்கி என்பதில் எனக்கு பெருமை" - எல்.முருகன் பேட்டி!
பெண்களுக்கான இடஒதுக்கீடு: ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் இதுவரை பெண்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு குறித்து பேச அருகதை இல்லை. சிறுபான்மை இன மக்களுக்கு தேர்தலில் கிடைக்க வேண்டிய 22 இடங்களில், திமுக வழங்கிய இடங்கள் எத்தனை?. நடந்து முடிந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக சிறுபான்மையின மக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கூட வழங்கவில்லை. தமிழகத்தில் மட்டும் தான் மதத்தை வைத்து, மக்களை சிறுபான்மையினர் என கூறுகின்றனர்.
ஆனால் உலகத்தில் மொழி, இனத்தை வைத்து தான் கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் மொழிவாரியாக, இன வாரியாக மட்டுமே, மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. பல மார்க்கங்களை பின்பற்றினாலும் மதங்கள் உருவாவதற்கு முன்பே ஒரே இனமாக வாழ்ந்த மக்கள் தமிழ் மக்கள். சிறுபான்மையின மக்களுக்கு ஆட்சியாளர்கள் வழங்கிய சலுகைகள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அவர்களுக்கு உரிமைகளை பெற்று தருவது நாம் தமிழர் கட்சியின் நோக்கம்.
துணைமுதல்வராவதற்கு என்ன தகுதி?: அருந்ததியர் மக்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு கருணாநிதி வழங்கினார் என்று கூறுகின்றனர். அதை வழங்குவதற்கான இடத்தை யார் வழங்கினார்கள். மக்களாகிய நாங்கள் தான் வழங்கினோம் என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் உணர்ந்து பேச வேண்டும். வன்னியர் சமூகத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் மூலம் தடுத்தது யார்?. எதற்காக இட ஒதுக்கீட்டை கூறு போட்டு தர வேண்டும்? எண்ணிக்கை அடிப்படையில் வழங்குவதற்கு அரசுக்கு என்ன தயக்கம்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் தமிழகத்தில் ஏன் இதுவரை அரசு சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. எண்ணிக்கை அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆவதற்கு கருணாநிதியின் குடும்ப வாரிசு என்ற தகுதி மட்டுமே போதும் என்ற நிலை உள்ளது.
தனித்தே போட்டி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருணாநிதியின் பேரன் என்ற ஒற்றை தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுகவில் உள்ள மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் தான் சமூக நீதிக் கொள்கை கொண்ட கட்சி திமுக தான் என்று கூற முடியும். பணம் கொடுத்தால் தான் வாக்குகளை பெற முடியும் என்ற நிலையை திராவிட கட்சிகள் ஏற்படுத்திவிட்டன. தேர்தலில் இரண்டு கட்சி மட்டுமே வெற்றி, தோல்வியை முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றுவதற்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துப் போட்டியிடும்” என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்