கிருஷ்ணகிரி: நடைபெறும் மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் (Krishnagiri Lok Sabha Constituency) வீரப்பன் மகள் வித்யாராணி நாம் தமிழர் கட்சி (Naam Tamilar) சார்பாக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுக சார்பில் கோபிநாத், அதிமுக வேட்பாளராக ஜெயபிரகாஷ், பாஜக வேட்பாளராக நரசிம்மன் போட்டியிடுகின்றனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்:
Gopinath K | கோபிநாத் கே | INC | காங். | CONGRESS | காங்கிரஸ் |
Jayaprakash V | ஜெயப்பிரகாஷ் வி | AIADMK | அஇஅதிமுக | All India Anna Dravida Munnetra Kazhagam | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் |
Narasimhan C | நரசிம்மன் சி | BJP | பா.ஜ.க. | Bharatiya Janata Party | பாரதிய ஜனதா கட்சி |
Vidhya Rani Veerappan | வித்யா ராணி வீரப்பன் | NTK | நா.த.க. | Naam Tamilar Katchi | நாம் தமிழர் கட்சி |
"கர்நாடகாவில் முன்னாள் அமைச்சரான ராஜ கவுடா தேர்தலில் வெல்வதற்கு நானும் காரணம். எனக்கு தெரிந்த மக்களிடம் ராஜ கவுடாவுக்கு ஓட்டு போடுமாறு கூறினேன்". இது 1999ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வீரப்பன் பேசிய வார்த்தைகள். பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு காட்டில் தலைமறைவாக இருந்தாலும், வீரப்பனுக்கு அரசியலில் தீராத ஆசை இருந்தது.
உத்தரபிரதேசத்தில் பூலான் தேவிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர் அரசியலில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டும் வீரப்பன். இதனையே முன்மாதிரியாகக் கொண்டு தனக்கும் மன்னிப்பு கிடைக்கும் என காத்திருந்தார். காட்டிலிருந்து வெளியான வீடியோ, ஆடியோ கேசட்டுகள் வீரப்பனின் அரசியல் ஆசையை வெளியுலகிற்கு தெரியப்படுத்தின. ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாமல் 2004ம் ஆண்டு வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது அனைவருக்கும் அறிந்ததே.
வீரப்பனின் ஆசை நிறைவேறாது போனாலும் இன்று அவரது மகள் அரசியலில் களம் கண்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார், வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி வீரப்பன். தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் உள்ள இந்த தொகுதிக்குட்பட்ட ஒசூரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த வித்யாராணி வீரப்பன் ஈடிவி பாரத்துக்காக பேட்டி அளித்தார். இனி அவர் அளித்த பேட்டியைக் காணலாம்.
கேள்வி: தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் உங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்? வரவேற்பு எப்படி இருக்கிறது?
பதில்: பிரச்சாரத்திற்கு செல்லும் போது, மக்கள் அனைவரும் என்னை அவர்களது சொந்த பொண்ணாகத் தான் பார்க்கிறார்கள். அப்பா (Veerappan) இல்லயென்ற ஆதங்கம், பாசத்தை என் மீது வெளிப்படுத்துகிறார்கள். தேர்தல் கள நிலவரம் மிகவும் ஆதரவாக உள்ளது. அரசியலைத் தாண்டி என்னை எமோஷனலாக ஒரு மகளாகத் தான் பார்க்கிறார்கள்.
கேள்வி: உங்களின் அரசியல் நிலைப்பாட்டில் அம்மா, சகோதரியின் ஆதரவு உண்டா?
பதில்: கண்டிப்பாக அவர்கள் எனக்கு ஆதரவுதான். ஏனென்றால், அவர்களும் தமிழ் தேசியம் என்ற கொள்கையின் கீழ் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: சமீபத்தில் வீரப்பனின் வாழ்க்கை குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியானது. இன்றைய தலைமுறை வீரப்பன் அறிந்திராத சில பக்கங்கள் குறித்து வெளிப்படுத்தியது. அது பற்றிய உங்களின் கருத்து என்ன?
பதில்: அப்பா (வீரப்பன்) சில விஷயங்களை அன்றே தெரிவித்துவிட்டார். அன்று கூறியதை இன்றுள்ள மக்களுக்கு புரியும் வகையில் கடவுள் வாய்ப்பு அமைத்துக் கொடுத்துள்ளார். தந்தை பலதரப்பட்ட மக்களிடம் பலவிதமாக பிரதிபலிக்கப்பட்டார். ஆனால் இன்று அவர் செய்த ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும், ஒரு காரணம் உள்ளது என்பது மக்களிடம் போய் சேர்ந்தது நல்ல விஷயம் தான்.
கேள்வி: உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: தொகுதியில் அனைவரும் உறுதுணையாகவும், எனக்கு ஓட்டுப் போட வேண்டும் என ஆர்வமாகவும் உள்ளனர்.
கேள்வி: சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தீர்கள். அந்த கட்சியில் இருந்து விலக காரணம் என்ன?
பதில்: பாஜக ஒரு தேசிய கட்சி, மக்களுக்கு எதாவது செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் தான் சென்றேன். சுமார் ஒன்றரை வருடம் சரியாகத்தான் இருந்தது, அதற்குமேல் எனக்கு சரியாக வரவில்லை. ஆகையால் தீவிரமான செயல்பாடுகள் ஏதும் இன்றிதான் இருந்தேன். இந்த முறை கடைசி நேரத்தில் பாஜகவிலும் எனக்கு இதே தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தார்கள். கொள்கையின் காரணமாக அதை புறக்கணித்துவிட்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தேன்.
கேள்வி: கொள்கை காரணமாக பாஜக வை விட்டு விலகியதாக கூறுகிறீர்கள். நாம் தமிழர் கட்சியின் எந்த கொள்கை உங்களை ஈர்த்துள்ளது?
பதில்: உயிர்கள் மீதான நேசம் தான். அதாவது மனிதர்களுக்குள்ளேயே இனம், மொழி, மதம் என வேறுபாடுகள் இருக்கிறது. இன்றைய சூழலில் மனித நேயம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. அரசியல்வாதிகளும் அப்படிதான் இருக்கிறார்கள். என்னதான் மனித நேயம் இருந்தாலும், மக்களும் அதை வெளிப்படுத்த முடியாத சூழலில் உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் தேசியம் என்பது அடிப்படை தேவை. அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்றால், மனிதர்கள் மட்டுமில்லாமல் மரம் செடி, கொடி, மண் நிலம் நீர் என இயற்கையை பாதுகாத்து அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதனை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொடுக்க வேண்டும் என நாமும் வாழ வேண்டும், வரும் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது தான் என்னை ஈர்த்தது" எனத் தெரிவித்தார்.
கேள்வி: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான உங்களின் வாக்குறுதி என்ன?
பதில்:
- பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை ஓசூர் வரையிலும நீட்டிக்கப்பட வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- பெங்களூரு - மைசூரூ 2 இடத்திலும் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அதேபோல ஒசூரிலும் ஒரு சர்வதேச விமான நிலையம் வேண்டும் என குரல் கொடுப்பேன்.
- இம்மண்ணின் மைந்தர்களிடம் இருந்து நிறைய விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. தனியார் தொழிற்சாலைகளால், நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது. ஆகையால் விவசாயம் என்பது கேள்விக்குறியாகிக் கொண்டே வருகிறது. இங்குள்ள மண்ணின் மைந்தர்களுக்கு 80 சதவீதமாக வேலைவாய்ப்பு இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் கிடைக்க வேண்டும் என்பதை ஒரு சட்டமாக போட வேண்டும் என்பதற்கு குரல் எழுப்பப் போகிறேன்.
இதையும் படிங்க : வீரப்பன் காட்டில் நடக்கும் வழிபாடு... சாமியாக மாறிய வனத்துறை அதிகாரி...