தஞ்சாவூர்: 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில், தொகுதி வேட்பாளர்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் தனக்கு மைக் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
இப்பரப்புரையின் ஒரு பகுதியாக, இன்று கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளான பாலக்கரை, மேலக்காவேரி, கொட்டையூர் ஆகிய இடங்களில் திறந்த வாகனத்தில் நின்று பயணித்தபடி வீதி வீதியாக பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பெரும்பாண்டி பகுதியில் உள்ள கரும்புச்சாறு கடைக்கு சென்ற வேட்பாளர் காளியம்மாள், தன் கைகளாலே கரும்புசாறு தயாரித்து, கோடை வெய்யிலுக்கு இதமாக பொது மக்களுக்கு வழங்கி, மக்களிடம் மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, அங்கு சிறிது நேரம் அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் பேசிய அவர், “இந்த தேர்தலில் ஓட்டிற்கு பணம் தராமல், லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் அமைந்திட, படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவும், தொகுதி மக்களுக்கு தேவையான சட்டங்கள், திட்டங்கள் கொண்டு வரவும், கச்சத்தீவு மற்றும் விவசாயிகளின் காவிரி பிரச்சினைகளை களையவும், அதற்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிடவும், எளிய மக்களும் அரசியல் செய்ய முடியும் என்பதனை மெய்பிக்கவும் மைக் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்” என பேசினார்.
அவருடன் ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், இருசக்கர வாகனத்தில் கட்சி கொடிகளுடன் செல்ல, தீவிர பரப்புரை பயணம் மாநகராட்சியின் 48 வட்டங்களிலும் தொடர்ந்தது.
இதையும் படிங்க: 'கட்சியை காப்பற்றவே விருப்பமில்லாமல் வேட்பாளராகிய துரை வைகோ?' - நடிகை கௌதமி சாடல் - Lok Sabha Election 2024